
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று (24-02-25) தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள், ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் சென்றார். அங்கு சென்ற அவர், ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “அனைத்து மாவட்ட இளைஞர்களையும் ஒருங்கிணைத்து மாற்றத்தை உருவாக்குவோம். ஜெயலலிதாவின் லட்சியம் நிறைவேற பாடுபட வேண்டும். ஜெயலலிதா நினைத்திருந்தால், எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். ஆனால், எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உடல்நலம் சரியில்லாத நிலையிலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆண்ட கட்சி மீண்டும் ஆளுகின்ற வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். ஜெயலலிதாவின் உழைப்பு வீணாகிவிடக் கூடாது என்பதற்காக தான் ஓபிஎஸ், 5 ஆண்டுகாலமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து ஆட்சியை நிறைவு செய்தார். ஆனால், அந்த நன்றியை அவர் எதிர்பார்க்க மாட்டார்.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு அவலங்களை சந்தித்து வருகிறது. தொண்டர்களுடைய எழுச்சி ஒரு நாள் வெடிக்கும், அது புரட்சியாக மாறும். அன்று, ஜெயலலிதாவின் கனவு நனவாகும். அதிமுக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி தர வேண்டும். இரண்டு கைகளையும் தட்டினால் தான் ஓசை எழும்; அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஆசை. இதை தான் ஓபிஸும் சொல்கிறார். இதை புரிந்தவர்கள், புரிந்து நடந்தால் அனைவருக்கும் நல்லது. புரியாமல் நடந்தால், தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.