
சென்னையை அடுத்துள்ள பையனூரில் கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக் காலத்தில் திரைப்படத்துறையினருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டது. இருப்பினும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அங்கு வீடுகள் கட்டாததால் அதற்கான அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து திரைத்துறையினர் மீண்டும் அந்த அரசாணையைப் புதுப்பிக்க அரசிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்(ஃபெப்சி) தலைவர் செல்வமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “எங்கள் அமைப்பில் மொத்தம் 25,000 உறுப்பினர்கள் உள்ளார்கள். அதில் 21,000 பேர் சொந்த வீடுகள் இல்லாமல் சென்னையில் வாடகையிலோ அல்லது வெளியில் இருந்து வருகிறார்கள். அதை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினோம். திரைப்படத் தொழிலாளர்களின் பணி நேரம் அதனுடைய வசதிக்கு ஏற்ப 12 மணி நேரம் என்பது வரையறுக்கப்பட்டது. அது மட்டுமல்லாது வெளியில் இருந்து வரும்போது ஏறக்குறைய 4 மணி நேரம் பயணத்திற்காக செலவிடப்படுகிறது. இதனால் 16 மணி நேரம் எங்கள் தொழிலாளர்கள் உழைப்பிற்காக நேரத்தை செலவிடக்கூடிய மிக சிரமமான நிலை உள்ளது என எடுத்து கூறினோம்.
பையனூரில் முதற்கட்டமாக ஆயிரம் குடியிருப்புகளைத் துவங்க உள்ளோம். ஏற்கனவே அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு அரசாணை பிறப்பிக்க படாததால் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது ஒரு மாதத்திற்குள் அதன் வேலைகளை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். துணை முதல்வரை திறந்து வைக்குமாறு கோரிக்கை வைத்தோம். அவரும் வருவதாக உறுதியளித்தார். முக்கியமான சகோதரருக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். ஆயிரம் குடியிருப்புகளை நாங்கள் துவங்கியபோது முதற்கட்டமாக 500 சதுர அடியுள்ள குடியிருப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய் ஒரு உறுப்பினர் கட்டவுள்ள நிலை உள்ளது. அதில் கட்டமுடியாமல் இருக்கும் உறுப்பினர்கள் நிலை குறித்து அனைத்து பிரபல நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் தெரியப்படுத்தினோம். அதில் விஜய் சேதுபதி ஒரு உறுப்பினருக்கு 50,000 வீதம் 250 உறுப்பினர்களுக்காக தொகை ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாயை உடனடியாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
முதலில் இரண்டு லட்சம் ரூபாய் கட்டும் 250 உறுப்பினர்களின் கணக்கில் விஜய் சேதுபதியின் பணம் வரவு வைக்கப்படும். இந்த உதவியை வழங்கிய விஜய் சேதுபதிக்கு எங்கள் சங்கம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்களின் நன்றியின் வெளிப்பாடாக முதலில் அமையும் குடியிருப்புக்கு விஜய் சேதுபதி டவர் என்றே அழைக்க முடிவு செய்துள்ளோம். மொத்தம் ஆறு டவர் வரவிருக்கிறது. மீதமுள்ள ஐந்து டவருக்கு வசதி உள்ள நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறோம்” என்றார்.