
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று (24-02-25) தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள், ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில், எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர், “பெண் குழந்தைகள் படிக்கின்ற பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி இனி பெண் குழந்தைகளுக்கு எவ்வித பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்த அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதிமுக அரசில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர்.
இன்றைக்கு தொடர்ந்து பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பெண்களுக்காவும், அவர்களுடைய வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. பல வகையிலும் பெண்களுக்கு உதவிகரமாக இருந்த அரசு, அதிமுக அரசு என்பதை இந்த நேரத்தில் நினைவு கூருகிறேன்” என்று கூறினார்.