Skip to main content

“தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சிக்க அருகதையற்றவர் ராமதாஸ்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 24/02/2025 | Edited on 24/02/2025

 

 Ramadoss is unfit to criticize  Tamil Nadu govt says Minister I. Periyasamy

மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தராததை ஏன் என கேள்வி கேட்கக்  கூட திராணியற்ற ராமதாஸ் தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சிக்க அருகதையற்றவர் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தனது  அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் நடந்திருப்பதாக சமூக தணிக்கையில் வெளியான தகவல்  குறித்து பாமகம நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதி திட்டத்தில் சமூக தணிக்கையினை முறையாக நடத்துவதிலும், குறைகள் கண்டறிவதிலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை  எடுப்பதிலும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுவதால் தேசிய அளவில்  தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. 2024-25ம் ஆண்டிலும் சமூக  தணிக்கை நடந்ததில் இதுவரை 79,122 குறை பத்திகள் என அறிக்கை  அளிக்கப்பட்டுள்ளது. இதில் 30,198 பத்திகள் நிதி இழப்பீடு பத்திகள் எனவும்,  அதற்கான தொகை ரூ.14.07 கோடி எனவும், மீதமுள்ள 48,924 பத்திகள் நிதி இழப்பீடு இல்லாத சாரண பத்திகள் எனவும் அறிக்கை பெறப்பட்டது.

இப்பத்திகள் மாவட்ட அளவில் ஆய்வு செய்யப்பட்டும்,  ஏற்புடைய மற்றும் ஏற்க இயலாத பத்திகள் பிரிக்கப்பட்டும் மாவட்ட ஆட்சியரால்  உயர்மட்டக்குழுவில் 6,437 பத்திகள் மற்றும் ரூ.204 கோடி நிதி இழப்பீடு என முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டது. இதில் வசூல் செய்யப்பட வேண்டிய  பத்திகளாக 6,215 பத்திகளும் நிதி இழப்பீடு தொகையாக இதுவரை ரூ.194 கோடி என  இறுதி செய்யப்பட்டுள்ளது. மீதத்தொகை குறித்து உயர்மட்டக்குழு கூட்டம் மூலம்  முடிவு செய்யப்பட சீரிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது மாநில  அளவில் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

மேற்படி நிதி இழப்பீடு தொகை ரூ.194 கோடியில்  சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ.193 கொடி வசூல் செய்யப்பட்டு அரசின்  தலைப்பில் கட்டப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக முறைகேட்டிற்கு காரணமானவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீதமுள்ள  பத்திகளின் மீதும் மாவட்ட ஆட்சியர் உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வனைத்து பணிகளும் இந்நிதியாண்டிற்குள்  முடிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்