முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்தது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாகத்தான் சொல்ல முடியும். தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினின் தந்தை கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் நளினி தவிர மீதி 6 பேருக்குத் தண்டனையைக் குறைக்கக் கூடாது என்று தன் கைகளாலேயே எழுதியுள்ளார். ஆனால் இன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பின் உரிமை கொண்டாடுகிறார்கள்.
எடுத்த நிலையில் மாறாமல் எப்போதும் உறுதியாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். இது நிமிடத்திற்கு நிமிடம் வேடங்களை மாற்றிக் கொண்டு மக்களை ஏமாற்றும் செயல்தான்.
இன்று 6 பேர் விடுதலை அடைந்தது மிகுந்த வரவேற்பிற்குரிய விஷயம். இதில் திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது கிடையாது. அன்றே விடுதலை செய்திருக்கலாம். இருந்தும் நாங்கள் எடுத்த தொடர் நடவடிக்கையால் உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது” எனக் கூறினார்.