சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று காலை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன், தினகரன் அணியில் பொறுப்பில், பதவியில் இருக்கிறார்கள். மேலும், டிடிவி தினகரனோடு 3 பேரும் இருக்கும் புகைப்பட ஆதாரங்களையும் கொடுத்துள்ளேன்.
அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளேன். பேரவைத் தலைவர் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வார் என்று கூறினார்.
3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அதன் மூலம்தான் இந்த ஆட்சியை தக்க வைக்க முடியும் என்று அதிமுக அரசு நினைத்தால் அதிமுக அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழப்பார்கள். இன்னும் 4 தொகுதி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவில்லை. 3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் இந்த இடைத்தேர்தலில் தினரகனின் அமமுகவுக்கு அனுதாப வாக்குகள் விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படியில்லையேல் எதிர்க்கட்சியான திமுகவுக்கு வாக்குகள் கூடுதவற்கு வாய்ப்புகள் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.