நாகை மாவட்டம் புஷ்பவனம் என்பது இலங்கையைப் போன்ற இயற்கை அமைப்பைக் கொண்டது. சமீபத்தில் அங்கு ஒரு புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு, நேற்று (19.02.2021) நன்றி அறிவிப்பு மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பள்ளிக்கு மதுரையைச் சேர்ந்த இந்து சமுதாய தொழிலதிபர் கண்ணன் என்பவர் தன் குடும்பம் சார்பில் மார்பிள்ஸ் சலவை கற்களை வழங்கியுள்ளர். அவரது மருமகன் சரவணன் என்பவர் குவிமாடம் கட்ட நிதியளித்துள்ளார்.
நேற்று நிகழ்ச்சிக்கு வர முடியாத நிலையில் மாலை தொழுகை நேரத்தில் கண்ணன் அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து பிரார்த்தித்தார். அப்போது அங்கு தொழுகைக்கு வந்த மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.விடம் ஜமாத்தினர் அவர் பற்றிய விபரங்களைச் சொன்னதும், அவர் உடனே அவரை பாராட்டி சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். ஒரு இறைப்பணியில் எங்கள் குடும்பம் பங்களிப்பு செய்துள்ளது மன நிறைவளிப்பதாக கண்ணன் கூறினார்.
அதுபோல் அப்பகுதியைச் சேர்ந்த என்.எஸ்.கே. என அழைக்கப்படும் ஒரு சகோதரர், தன் சார்பில் ஒரு பெரிய சுவர் கடிகாரத்தை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக அக்கிராமத்தில் உள்ள இந்து சமுதாய மக்கள் அங்கு வந்து செல்ஃபி எடுத்து சென்ற வண்ணம் உள்ளனர்.
அவ்வூரில் 100 க்கும் குறைவான முஸ்லிம் குடும்பங்கள் உள்ள நிலையில், அவ்வூர் இந்துக்கள் காலம்காலமாக காட்டி வரும் அரவணைப்பு நெகிழ்ச்சியாக உள்ளது. இரண்டு சமுதாயங்களும் தங்கள் தரப்பு மதவெறியர்களை அண்டவிடாமல் ஒரு குடும்பமாக வாழ்வது குறிப்பிடத்தக்கது.