இந்தியாவில் உள்ள கட்சிகளின் சொத்து மதிப்புகள் குறித்து ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த ஒரு ஆண்டில் பாஜகவின் சொத்து மதிப்பு 22 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் 1213.13 கோடி ரூபாயாக இருந்த பாஜகவின் சொத்துக்கள், 2018ம் ஆண்டில் 22 சதவிகிதம் அதிகரித்து 1,483.35 கோடியாக அதிகரித்துள்ளது.
அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் ஓராண்டில் 15.26 சதவிகிதம் குறைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் 854.75 கோடி ரூபாயாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் 2018 ஆம் ஆண்டில் 724.35 கோடியாக குறைந்துள்ளது. பணக்கார கட்சி என்கிற வகையில் முதல் இரண்டு இடங்களை பாஜக மற்றும் காங்கிரஸ் காட்சிகள் பிடித்துள்ளன.
இவை இரண்டிற்கும் அடுத்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளது. 2017 ஆம் நிதியாண்டில் 680.63 கோடியாக இருந்த அக்கட்சியின் சொத்துகள் 5.30 சதவிகிதம் அதிகரித்து 2018ம் ஆண்டில் 716.72 கோடியாக உயர்ந்தது.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சொத்துகளும் ஓராண்டில் அதிகரித்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் ஓராண்டில் 16.39 சதவிகிதம் குறைந்துள்ளன.