கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் வரை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ரயில் நேற்று(28.6.2024) காலை எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு சாலக்குடியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலில் 20 பெட்டிகள் உள்ள நிலையில் அதில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். காலை 10 மணியளவில் வள்ளத்தோடு பாலம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக ரயில் என்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்று தனியாகச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக செயல்பட்டு என்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினர். பாலத்தைக் கடக்க ரயிலின் வேகம் குறைக்கப்பட்டதால், கழன்று சென்ற ரயில்பெட்டிகள் சிறிது தூரம் சென்று தானாகவே நின்றது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சூர்,பாலக்காடு ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள் கழன்ற சென்ற ரயில் பெட்டிகளை மற்றொரு ரயில் என்ஜின் உதவியோடு இழுத்து வந்து, சம்பந்தப்பட்ட ரயிலுடன் இணைத்தனர். இதையடுத்து 4 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து பேசிய ரயில்வே உயர் அதிகாரிகள், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து பெட்டிகள் கழன்று சென்றது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.