இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 2024ஆம் ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. கடந்த மாதம் நடைபெற்ற பிரசாந்த் கிஷோர் - சரத் பவார் சந்திப்பு, அதன்பிறகு நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம், அண்மையில் நடைபெற்ற ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ஆகிய அனைத்தும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மையமாக கொண்டே நடைபெறுவதாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் மம்தா பானர்ஜி, நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது டெல்லி சென்று நண்பர்களைச் சந்திப்பேன் என நேற்று (15.07.2021) தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மம்தா 25ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் அங்கு சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பார் எனவும், 2024 தேர்தலில் பாஜகவிற்கு எதிராக இணைந்து போட்டியிடுவது குறித்து விவாதிப்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த மார்ச் மாதத்திலேயே மம்தா பானர்ஜி, பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சோனியா காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், சமீபத்தில் சரத் பவார் நடத்திய எதிர்க்கட்சி கூட்டத்தைக் கூட்டியதில், தற்போது திரிணாமூல் காங்கிரஸில் இருக்கும் பாஜக முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா முக்கியப் பங்காற்றினார். இந்தச் சூழலில் மம்தாவே எதிர்க்கட்சித் தலைவர்களை நேரடியாக சந்திக்க இருப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.