Skip to main content

“இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்தைப் பயன்படுத்தக்கூடாது” - உலக சுகாதார அமைப்பு உத்தரவு

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

WHO has said Marion Biotech cough medicine should not be used

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் அரசு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. அதில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள 'மரியான் பயோடெக்' நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்ததால் தான் 18 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை, 'Dok 1 Max Syrup' என்ற அந்த இருமல் மருந்தின் பெயரையும் குறிப்பிட்டதோடு, மரியான் பயோடெக் நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்தது. 

 

இதனைத் தொடர்ந்து, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள அந்நிறுவனத்திற்குச் சென்று  'Dok 1 Max Syrup' மருந்தை ஆய்வு செய்தனர். முடிவில் மருந்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து,  Dok-1 Max மருந்து உட்பட அனைத்து மருந்து தயாரிப்பையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நிறுத்த உத்தரவிட்டிருந்தது. 

 

இந்த நிலையில் நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.  உஸ்பெகிஸ்தானில் மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து மரியான் பயோடெக் நிறுவனத்தின் 'டோக்-1 மேக்ஸ்' மற்றும் 'அம்ப்ரோனால்' என்ற இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு பரிசோதித்தது. இதில், இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மருந்துகளும் குழந்தைகள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்