![Video of girlfriend's throat being cut and held in hand; A young man's disturbing psycho act](http://image.nakkheeran.in/cdn/farfuture/iQF0dAOoYXypNRJZ9mAv4qmijabu0j4du_z4jtQu2fA/1718368487/sites/default/files/inline-images/a72151_0.jpg)
உத்தரப்பிரதேசத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராக இருந்து வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியின் தலையை வெட்டி சிரித்த முகத்துடன் அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட சைக்கோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் புலசந்தர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தன். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். இந்நிலையில் இளைஞர் அந்தன் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காதலி அவரிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார். இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்தன் திடீரென ஆத்திரத்தில் காதலியின் தலையைத் துண்டாக வெட்டியுள்ளார்.
வெட்டிய தலையுடன் சிரித்துக் கொண்டே வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'நடிகர் சஞ்சய் தத் நடித்த கல்நாயக் என்ற படத்தைப் பார்த்து அதில் வரும் 'பல்லு' என்கிற கேரக்டர் போலவே தானும் கொலை செய்தேன்' எனத் தெரிவித்துள்ளது பதைபதைப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் 'இனி யார் என்னை ஏமாற்றினாலும் இப்படித்தான் கொலை செய்வேன்' எனவும் பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது,
ஒரு சினிமா நடிகரைப் பார்த்து இளைஞர் கொடூரச் செயலில் ஈடுபட்டு நேரடியாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உத்தரப்பிரதேச போலீசார் இளைஞர் அந்தனை கைது செய்துள்ளனர்.