சிக்கன் மற்றும் முட்டையை சைவ உணவாக அறிவிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி சஞ்சய் ரவுத் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய மருத்துவ முறைகள் அடங்கிய ஆயுள் அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. அப்போது சிவசேனா கட்சியை சேர்ந்த மூத்த அரசியல்வாதியான சஞ்சய் ரவுத் பேசுகையில், "சிக்கன் மற்றும் கோழி முட்டையை சைவமாக அறிவிக்க வேண்டும்.
நந்தர்பார் பகுதிக்கு உள்பட்ட கிராமம் ஒன்றுக்கு சென்ற போது, அங்குள்ள பழங்குடியினர் எனக்கு ஆயுர்வேத சிக்கன் என்று கூறி உணவளித்தனர். மேலும் சிக்கன் பல வகைகளில் மருந்தாகவும் பயன்படுகிறது என்று கூறினர். அதுமட்டுமல்லாமல் கோழிக்கு ஆயுர்வேத உணவுகளை அளித்தால், அது போடும் முட்டையும் ஆயுர்வேத உணவாக மாறிவிடும். எனவே இப்படி இந்த இரண்டையும் சைவத்திற்குள் கொண்டு வரலாம்" என பேசினார். தற்போது இவரது இந்த பேச்சை பலரும் கிண்டல் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.