இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பருவநிலை மாற்றங்களால் வானிலையில் ஏற்படும் பிரச்சனைகள் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது சமீபத்திய ஆய்வு.
பருவநிலை மாற்றங்களால் போதுமான, ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைப்பதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இங்கிலாந்தின் எக்ஸிடர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று ஆய்வு நடத்தியது.
இதுதொடர்பான ஆய்வறிக்கை ராயல் சொசைட்டி ஏ-ன் தத்துவார்த்த பரிவர்த்தனைகள் என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள வளரும் மற்றும் மெதுவாக வளரும் 122 நாடுகளில் இந்தப் பிரச்சனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வெப்பமயமாதலால் அதீத வெப்பநிலை நிலவும் சூழலில், இன்னும் கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்குமானால் ஓமன், இந்தியா, வங்காளதேசம், சவுதி அரேபியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகள் உணவுப்பற்றாக்குறை பிரச்சனையை சந்திக்கும் நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
‘பருவநிலை மாற்றம் என்கிற பிரச்சனை அதீத மழை மற்றும் வறட்சியை உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தவல்லது. இதனால், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது’ என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பேராசிரியர் ரிசர்ட் பெட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா, வங்காளதேசம் போன்ற நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் நான்கு நாட்களுக்கும் மேலாக வெள்ளம் நீடித்து, அதன்மூலம் உணவு சேமிப்பு, உற்பத்தி, கொள்முதல் என எல்லா செயல்பாடுகளையும் நிறுத்தக்கூடிய அபாயம் இருப்பதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது.