இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.
இதற்கிடையே, நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. அதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கடந்த 24ஆம் தேதி அறிவித்தது. அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். மேலும், நிதிஷ்குமார் இன்றோ அல்லது நாளையோ ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, பின்பு அடுத்த நாளே பாஜக கூட்டணியுடன் இணைந்து முதல்வராக மீண்டும் பதவி ஏற்பார் என்று தற்போது தகவல் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியா கூட்டணி குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் இன்று (27-01-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் கூட்டணித் தலைவர்கள் கவலையில் இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அறிவிப்பின் மூலம் சர்ச்சைகள் அதிகமாகிவிட்டன. பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமாரின் பெரும் முயற்சியால் உருவான இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பற்ற பிடிவாதப் போக்கினால் தற்போது உடைந்துபோகும் தருவாயில் உள்ளன. தற்போது இந்தியா கூட்டணி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.