தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 63 இடங்களையும், பிஆர்எஸ் 40 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், பிற கட்சியினர் 8 இடங்களையும் பிடித்துள்ளனர்.
இந்த சூழலில் தெலங்கானா மாநில போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமார், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்கு முன்பாகவே தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டியை சந்தித்தாகக் கூறி தெலங்கானா போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமாரை சஸ்பெண்ட் செய்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.