
நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி (10.03.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் தான் தொகுதி மறுவரையறை குறித்த வாசகங்கள் அடங்கிய உடையை அணிந்து தி.மு.க. எம்.பி.க்கள் இன்று (20.03.2025) நாடாளுமன்றத்திற்குச் சென்றனர். அப்போது இதுகுறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதன் காரணமாக அவையில் நிலவிய அமளியால் நாளை (21.03.2025) வரை அவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
இது தொடர்பாகக் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்றத்திற்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட, அவர்களின் நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் வலியுறுத்தக் கூடிய எழுத்துக்களைக் கொண்ட சால்வைகளைப் போட்டுக்கொண்டு தான் இன்றும் அவையில் அமர்ந்து இருக்கிறனர். ஆளுங்கட்சியினர் செய்யும்போது, ஏற்றுக்கொள்ளக்கூடிய அவை தலைவர். எங்களை (எதிர்க்கட்சியினர்) மட்டும் உடையை மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்று கட்டளையிடும் போது, இது ஜனநாயக விரோதமாகவும், முக்கியமாக எதிர்க்கட்சிகளுக்கு விரோதமான செயலாகத்தான் பார்க்க முடிகிறது.
உடையோ, தொகுதி மறுசீரமைப்போ ஒன்றிய அரசுக்குப் பிரச்சனை இல்லை. எதிர்க்கட்சிகள் இல்லாமல் அவையை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது. எதிர்க்கட்சிகளும், எதிர்க் கருத்துக்களும் ஒன்றிய அரசுக்குப் பிரச்சனை தான். எதிர்க் கருத்துக்களே இல்லாத, ஆளுங்கட்சி எம்.பி.க்களை போல வாழ்க வாழ்க என்று கோஷம் எழுப்பினால், அவையை அமைதியாகவும், சிறப்பாகவும் நடப்பதாக ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுடைய கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களையோ, நம்முடைய கொள்கை சார்ந்த கருத்துக்களை முன்வைத்தாலோ ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் நாடாளுமன்றத்தில் அவை நடைபெறும் நாட்கள் கூட பாஜகவின் ஆட்சியில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
பிரதமர் மோடி அவையில் இருக்கக்கூடிய நாட்களையும், அவைக்கு வரக்கூடிய நாட்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்குக் குறைவான நாட்கள் தான் நாட்டின் பிரதமர் மோடி அவையில் இருக்கிறார். அவர்களுக்கு நாடாளுமன்றத்தின் மீது என்ன மரியாதை இருக்கிறது என்பதில் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறோம். மார்ச் 22ஆம் தேதி, தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னெடுப்பில் நாடு முழுவதும் எந்தெந்த மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படுமோ, அந்த மாநிலங்களைச் சார்ந்த முதலமைச்சர்கள், தலைவர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்காகச் சென்னைக்கு அழைத்து இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சூழலில், நிச்சயமாக நாளை (21.03.2025) நாடாளுமன்ற வளாகத்தில் நிச்சயமாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, அவையிலும் இது தொடர்பாகக் கருத்துக்களை விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்புவோம். வழக்கம்போல, அவர்கள் அனுமதிப்பார்களா இல்லையா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இது தொடர்பாக ஒரு நியாயமான மறுசீரமைப்பு என்ற உறுதியை ஒன்றிய அரசு தெளிவுபடுத்தும் வரை, இந்தப் போராட்டம் தொடர்ந்தது நடைபெறும். எதிர்க்கட்சிகள் இல்லாமல் அவையை நடத்த முடியும் என்றால்?. அதனை மகிழ்ச்சியோடு நடத்துவார்கள்” எனப் பேசினார்.