Skip to main content

“ஆண்களுக்கு இலவச மதுபாட்டில்கள் வழங்க வேண்டும்” - காங்கிரஸ் அரசுக்கு எம்.எல்.ஏ கோரிக்கை

Published on 20/03/2025 | Edited on 20/03/2025

 

 MLA requests Karnataka Congress government should be given free liquor bottles to men

கடந்த 2023ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஐந்து முக்கிய திட்டங்களை காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதில், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண் தலைவிக்கு ரூ.2,000 மாதாந்திர உதவித் தொகை, வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பொது போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்திருந்தது.

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் ஒவ்வொரு திட்டங்களையும், காங்கிரஸ் கட்சி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், பெண்களைப் போலவே மது குடிக்கும் ஆண்களுக்கும் வாரம் ஒரு முறை 2 மதுபான பாட்டில்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கர்நாடகா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

 MLA requests Karnataka Congress government should be given free liquor bottles to men

கர்நாடகாவில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ எம்.டி கிருஷ்ணப்பா பேசியதாவது, “அவர்களுடைய செலவில், நீங்கள் பெண்களுக்கு மாதம் ரூ.2,000, இலவச மின்சாரம் மற்றும் இலவச பேருந்து பயணம் ஆகியவற்றை வழங்குகிறீர்கள். அது எப்படியிருந்தாலும் எங்கள் பணம். எனவே, குடிப்பவர்களுக்கு, வாரத்திற்கு இரண்டு பாட்டில்கள் இலவசமாகக் கொடுங்கள். அவர்கள் குடிக்கட்டும். ஆண்களுக்கு எப்படி மாதத்திற்கு பணம் கொடுக்க முடியும்? அதற்குப் பதிலாக, வாரத்திற்கு இரண்டு பாட்டில்கள் கொடுங்கள். அதில் என்ன தவறு? அரசாங்கம் இதை சங்கங்கள் மூலம் வழங்க முடியும்” என்று கோரிக்கை வைத்தார். 

இவரது கருத்துக்களுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் யுடி காதர் கூறியதாவது, “மது பாட்டில்களை கொடுக்காமலே நாங்கள் ஏற்கெனவே போராடி வருகிறோம். இதில் அவர்களுக்கு இலவசமாக மதுபானம் கொடுத்தால் என்ன நடக்கும்” என்று எம்.எல்.ஏவின் கருத்தை எதிர்த்தார். உடனே பேசிய எம்.எல்.ஏ எம்.டி கிருஷ்ணப்பா, “ பல சட்டமன்ற உறுப்பினர்களே மது அருந்துகின்றனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் குடிப்பழக்கம் குறித்து  கருத்தை தெரிவிக்கிறேன்” என்று கூறினார். இவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்