
ஆன்லைனில் குறைவான மதிப்பு கொடுத்ததால், பொறியியல் மாணவர் ஒருவரை சரமாரியாகத் தாக்கிய நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நடகா மாநிலம், கலபுரகி பகுதியைச் சேர்ந்தவர் விகாஷ் (18). பொறியியல் படித்து வரும் இவர், கடந்த 6 மாதங்களாக பணம் செலுத்தும் தனியார் விடுதி ஒன்றில் தங்கி வந்துள்ளார். விடுதி சுகாதாரம் மோசமாக இருந்ததாலும், கழிப்பறைகள் அசுத்தமாக இருந்ததாலும், உணவில் பூச்சிகள் இருந்ததாலும், கூகுளில் தனியார் விடுதிக்கு 1 ஸ்டார் மதிப்பீடு கொடுத்து எதிர்மறை கருத்தை பதிவிட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த விடுதி உரிமையாளர் சந்தோஷ், கூகுளில் போடப்பட்டிருந்த கருத்தையும், 1 ஸ்டார் மதிப்பீட்டையும் நீக்குமாறு விகாஷை மிரட்டியுள்ளார். அதனை விகாஷ் ஏற்க மறுத்ததால், சந்தோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அந்த கருத்துக்களை நீக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபரான விகாஷ், போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், தனியார் விடுதி உரிமையாளர் சந்தோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.