குறிப்பிட்ட பகுதியில் வாழும் இந்தியர்களை வங்கதேச குடியேறிகள் என கூறி பரவிய போலி வீடியோவால் 300 வீடுகள் தவறாக இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பெங்களூருவின் பெல்லந்தூர் அருகே வங்கதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக குடிசைகள் அமைத்து வாழ்வதாகவும், அவர்கள் திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் வீடியோ ஒன்று பரவியது. இதனை பாஜக எம்.எல்.ஏ வான அரவிந்த் லிம்பாவள்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, வங்கதேச முகாமை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து இந்த வீடியோ வைரலாக சூழலில், பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் இருந்த 300 வீடுகளை இடித்து தள்ளியுள்ளார்.
அங்கிருந்த மக்கள் தாங்கள் இந்தியர்கள் தான் என நிரூபிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை காட்டி அதிகாரிகளிடம் வீட்டை இடிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதனை கண்டுகொள்ளாத அதிகாரிகள் வீடுகளை இடித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்து கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வேறு வழியின்றி மாரத்தஹள்ளி சாலையின் இருபுறங்களிலும் குடிசைகள் அமைத்து வீடுகள் தயார் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்கள் இந்தியர்கள் என்பதற்கான ஆதாரங்களை தற்போது திரட்டியுள்ளனர். இருப்பினும் போலி வீடியோ ஒன்றை நம்பி, மக்கள் காட்டிய ஆதாரங்களை நம்பாமல் 300 குடும்பங்களின் வீடுகளை இடித்து தள்ளிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.