இந்தியாவில் இருந்து நீட் தேர்வை என்றைக்கு ஒழிக்கிறோமோ அன்றைக்குத்தான் நவீனின் ஆத்மா சாந்தியடையும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு ஆப்ரேஷன் கங்கா மூலம் தயாகம் கொண்டு வந்தனர். அங்கு மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கடும் போராட்டத்துக்கு பிறகு நாடு திரும்பிய நிலையில், கர்நாடக மாணவர் நவீன் கார்கீவ் நகரில் நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதலில் பலியானார். அவர் கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரயில் நிலையம் சென்றபோது இந்தக் குண்டுவீச்சில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது.
அவரின் உடலை இந்தியா கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில், நவீன் தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதில், " இந்த நீட் தேர்வு காரணமாக நம்முடைய மாணவர் நவீனை இழந்துள்ளோம். என்றைக்கு இந்தியாவில் இருந்து நீட் தேர்வு ஒழிக்கப்படுகிறதோ அன்றைக்குத்தான் நவீனின் ஆன்மா சாந்தியடையும்" என்று தெரிவித்துள்ளார்.