
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகார் சட்டமன்றத்தில் சில தினங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, முதல்வர் நிதிஷ் குமாருக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்றும் கூட்டத்தொடரின் விவாதம் நடைபெற்றது. அப்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ குமார் கிருஷ்ணா மோகன் என்பவர் சட்டப்பேரவையில் மொபைல் போன் உபயோகித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டு கோபமடைந்த முதல்வர் நிதிஷ் குமார் உடனே எழுந்து, “இந்த சட்டப்பேரவையில் ஏற்கெனவே மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், இந்த சட்டப்பேரவையில் மொபைல் போன் கொண்டு வருபவர் யாராக இருந்தாலும், அந்த போனை அவையில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன்.
இது போன்ற செயல்களை ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். இதனால், பிரச்சனை ஏற்படும் என்பதால் தான் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து சட்டப்பேரவையில் மொபைல் போன் கொண்டு வருவதை நிறுத்தி வைத்தோம். இப்படியே இது தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த உலகம் அழிந்துவிடும்” என்று ஆவேசத்தோடு பேசினார். சட்டமன்றத்திற்குள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆட்சேபனைகளை எழுப்பியதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவரான ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சட்டமன்றத்தில் காகிதமற்றதாக மாற்றும் முயற்சியில் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு ஆன்லைன் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு உறுப்பினரும் கேள்வி கேட்க விரும்பினால், அவர்கள் தங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டை தான் பார்க்க வேண்டும். கல்வியற்ற முதல்வர் போல், பீகாரின் கணினியும் சிக்கலில் உள்ளது. தொழில்நுட்பத்துக்கு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக உள்ள பழமைவாத, பிற்போக்குத்தனமான முதல்வர் பீகாருக்கு கிடைத்தது என்பது துர்திஷ்டவசமானது. வெட்கக்கேடானது” எனப் பதிவிட்டுள்ளார்.