
இந்த ஆண்டின் (2025) இறுதிக்குள் சென்னையில் உள்ள பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கவும், மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இத்தகைய சூழலில் தான் பூந்தமல்லியில் இருந்து போரூர் வழித்தடத்தில் சுமார் 2.5 கி.மீ தொலைவுக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று (20.03.2025) மாலை நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருந்த வழித்தடத்தில் திடீரென யாரும் எதிர்பாரா வகையில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்தது.
இதன் காரணமாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகச் சோதனை ஓட்டம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதே சமயம் ரயில் வழித்தடத்தில் அறுந்து விழுந்த மின் கம்பியையும், தொழில்நுட்ப கோளாறையும் சரிசெய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிர்வாக ஊழியர்கள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.