Published on 31/12/2018 | Edited on 31/12/2018
இஸ்லாம் சமூகத்தில் பின்பற்றப்படும் முத்தலாக் விவாகரத்து நடைமுறை சட்டவிரோதமானது என கடந்த ஆண்டு ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த டிசம்பரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் அந்த அவையில் மசோதா முடங்கியது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கேற்ப சில திருத்தங்கள் செய்து இன்று மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு விஷயங்கள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படாமலே நாடாளுமன்றம் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.