
திருமண அழைப்பிதழ் கொடுக்காததால் மணமகனின் தந்தையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சோனு. இவர், தன்னுடைய மகனுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார். அந்த திருமணத்திற்காக ஊர் முழுவதும் சோனு திருமண அழைப்பிதழ்களை விநியோகித்து வந்துள்ளார். ஆனால், அவர் வேண்டுமென்றே தனது பக்கத்து வீட்டுக்காரரான வான்ஷ் என்பவருக்கு மட்டும் திருமண அழைப்பிதழை கொடுக்காமல் தவிர்த்துள்ளாஅர்.
தனக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்காததால் வான்ஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழாவான ஹல்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த வான்ஷ், மணமகனின் வீட்டைத் தாக்கியுள்ளார். மேலும், மணமகன் தந்தை சோனு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதன் பிறகு, அங்கிருந்த பெண்கள் உள்பட பொதுமக்களை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் வான்ஷ் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதனையடுத்து, படுகாயமடைந்த சோனுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். தப்பிச் சென்ற வான்ஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.