ராஜஸ்தானில் உள்ள 3 பல்கலைக்கழகங்களில் 5 ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தடை விதித்துள்ளது. ஓ.பி.ஜெ.எஸ், சன்ரைஸ், சிங்கானியா ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்கியதில் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என புகார் எழுந்தது. அந்த புகாரையடுத்து, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், திருப்திகரமான பதில் அளிக்காததால், குறிப்பிட்ட 3 பல்கலைக்கழகங்களில் நிகழாண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரை மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யு.ஜி.சி செயலாளர் மணீஷ் ஜோஷி தெரிவித்துள்ளதாவது, “யுஜிசியின் பிஎச்டி விதிமுறைகள் மற்றும் பிஎச்டி பட்டங்களை வழங்குவதற்கான கல்வி நெறிமுறைகளின் விதிகளை பல்கலைக்கழகங்கள் பின்பற்றவில்லை என்று யுஜிசியின் நிலைக்குழு கண்டறிந்துள்ளது. பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்பின் நேர்மையை சமரசம் செய்வதாகக் கண்டறியப்பட்டு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு புதிய பிஎச்டி மாணவர்களைச் சேர்ப்பதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.
வருங்கால மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்தப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பிஎச்டி திட்டத்தில் சேர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனென்றால், அவர்களின் பட்டங்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்பட்டதாகவோ செல்லுபடியாகவோ கருதப்படாது.