மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை மாற்றியமைக்க 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று (16-01-25) ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு, தனது ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பை மாற்றியமைக்க ஊதியக் குழுவை அமைக்கிறது. அதன்படி, இந்தியாவில் 1947 முதல் இதுவரை 7 ஊதியக் குழக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கான சலுகைகள், சம்பள கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை தீர்மானப்பதில் ஊதியக் குழு முக்கிய பங்கி வகிக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட, ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016இல் செயல்படுத்தப்பட்டன. இந்த 7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2026ல் முடிவடைய உள்ளது. இந்த சமயத்தில், 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கூட்டத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.