வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மூன்று மசோதாக்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்திய கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மேலும், இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்தவகையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியம் ஆகியோர், அடுத்து வாரத்திற்குள் இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.