
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி, உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் மகளிருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பட்டியலிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மார்ச் 8ஆம் நாள் அங்கு மகளிர் உரிமைகள் காத்திடும் நோக்கில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1975ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை மார்ச் 8ஆம் நான் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளும் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடுகின்றன.
தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் மகளிர் தினத்தை மகளிர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் கொண்டாடுகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை மகளிர் உரிமைகளைக் காப்பதற்காக முதன்முதலில் 1921இல் நீதிக்கட்சி அரசு பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. அதனைத் தொடர்ந்து திமுக அரசு அமைந்தபொழுதெல்லாம் மகளிர்க்குக் காவல்துறையில் பணிகள், சொத்துரிமை, அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கும் மகளிர் திட்டம் முதலியவற்றுடன் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு முதலில் 33% என்றும், பின்னர் 50% என்றும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு பெண்கள் சமூக, பொருளாதார நிலைகளில் விடுதலை பெற்று வளம்பெறத் தொடங்கினர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பெண்கள் சமுதாயம் மேலும் மேலும் முன்னேறுவதற்கான பல புரட்சிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்திய மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் வழிகாட்டி வருகிறார். அதன்படி அரசுப் பேருந்துகளில் மகளிர், மாணவியர், மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மகளிர்க்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்.
பணிபுரியும் மகளிர்க்கு திருச்சி, கூடுவாஞ்சேரி, தாம்பரம், ஓசூர், திருவண்ணாமலை, பரங்கிமலை, சேலம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பாதுகாப்பான தோழி விடுதிகள் திட்டம் உட்பட மகளிர் சமுதாய மேம்பாட்டிற்குப் நிறைவேற்றி புரட்சிகரமான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றி வருகிறார். இத்தகைய புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி, தொடர்ந்து பல்வேறு வகையிலும் மகளிர்க்கான சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதனால், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மகளிர் சமுதாயம் அடைந்து வரும் முன்னேற்றங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டுகின்றன. இந்த வரலாற்று நிகழ்வுகளை நாளைய உலகம் போற்றும் என்பது திண்ணம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.