ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே, எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணியினர் 26 கட்சிகளை கொண்டு தங்கள் ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். மேலும், பீகார், பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தங்களது அணியை வலுவாக்கி வருகின்றனர்.
அதே வேளையில், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தங்களது ஆதரவை பெருக்கி வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை பல அரசியல் கட்சிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான், டோங்க் மாவட்டத்தில் உள்ள நிவாயில் இந்தியா ரசோய் யோஜனா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “ இந்தத் தேர்தல் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல. உங்கள் எதிர்காலத்தை பற்றிய தேர்தல். உங்கள் உரிமையை வழங்க யார் தயாராக இருக்கிறார்கள் என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் உங்கள் உரிமைகளை மீண்டும் மீண்டும் பறித்துள்ளது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். மக்களாகிய நீங்கள் தினமும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்கிறீர்கள். எனவே இந்த முறை புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள். ஒரு வேளை ராஜஸ்தானில் பா.ஜ.க ஆட்சி அமைந்து விட்டால் காங்கிரஸ் கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களும் நிறுத்தப்படும். மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்காவிட்டால் அவர்களே தீமைகளை எதிர்கொள்ள நேரிடுவார்கள்.
பணவீக்கம் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளது. இன்று (10-09-23) நடைபெற்ற ஜி20 மாநாடு நடைபெறும் இடத்தில் மழை தண்ணீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியதை கண்டேன். நமது நாட்டு மக்கள் சொல்ல பயந்ததை கடவுள் உங்களுக்கு இதன் மூலம் கூறியிருக்கிறார் என்று தோன்றுகிறது. உங்கல் அகந்தையை குறைத்து கொள்ளுங்கள் என்று இந்த மழை வெள்ளம் மூலம் கடவுள் பிரதமருக்கு கூறியிருக்கிறார். அதனால், நாடுதான் உங்களை ஒரு தலைவர் ஆக்கியது. மக்களை உயர்ந்தவர்களாக ஆக்குங்கள்” என்று கூறினார்.