
இந்தியாவின் மசாலா கிங் என அழைக்கப்பட்ட மகாஷே தாரம்பால் குலாட்டி இன்று காலை காலமானார்.
எம்.டி.ஹெச் நிறுவனத்தின் உரிமையாளரான மகாஷே தாரம்பால் குலாட்டி (97) 1923-ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத இந்தியாவின் சியால்கோட்டில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பைக் கைவிட்ட இவர், தனது தந்தையுடன் இணைந்து கண்ணாடி, சோப்புகள் விற்கும் தொழிலில் ஈடுபட்டார். பின்னர் தனது தந்தையுடன் இணைந்து மசாலா தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்ட அவர், இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது, டெல்லிக்குப் புலம்பெயர்ந்தார். பின்னர், டெல்லி ரயில் நிலையத்திலிருந்து குதிரை வண்டியில் மக்களை அழைத்துச் செல்லும் வேலையைச் செய்துவந்தார்.
பின்னர், தனது குதிரை வண்டியை விற்று மீண்டும் மசாலா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்ட அவர், பிற்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மசாலா நிறுவனத்தின் உரிமையாளராக வளர்ச்சியடைந்தார். ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்கள் அந்நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றும் ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தவரும் இவரே ஆவார். 97 வயதான மகாஷே தாரம்பால் குலாட்டி, உடல் நலக்கோளாறு காரணமாகக் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் இறப்புக்குப் பல்வேறு தொழிலதிபர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.