டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு கலவரங்கள் வெடித்தன. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த கலவரங்களில் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த கலவரங்கள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "இந்த வன்முறைக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சதி உள்ளது, டெல்லி தேர்தலின் போதும் நாம் இதேபோன்ற சம்பவத்தை பார்த்தோம். பல பாஜக தலைவர்கள் பயம் மற்றும் வெறுப்பினை உருவாக்கும் வகையில் கருத்துக்களை பேசிவருகின்றனர்.
டெல்லியின் தற்போதைய நிலைமைக்கு மத்திய அரசும், மத்திய உள்துறை அமைச்சருமே பொறுப்பு. இந்த வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். அதேபோல அமைதியை நிலைநாட்ட சரியான நடவடிக்கைகளை எடுக்காத மாநில அரசும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இரு அரசாங்கங்களின் கூட்டு தோல்விதான் டெல்லியில் இவ்வளவு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால் ராகுல் காந்தி கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.