இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசி, ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி ஆகியவற்றிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 16 முதல், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இதற்கிடையே இந்தியாவின் சீரம் நிறுவனம், ரஷ்யா தயாரித்த உலகின் முதல் தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆண்டுக்கு 30 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ள சீரம், செப்டம்பர் மாதம் இதற்கான உற்பத்தியை தொடங்க இருக்கிறது.