உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், மதுரை இரயில்வே கோட்ட கலந்தாய்வுக் குழு உறுப்பினருமான ராம் சங்கர் இரயில்வே அமைச்சக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
டெல்லியில் இயங்கிவரும் இரயில்வே அமைச்சக தலைமை அலுவலகத்தில் மதுரை இரயில்வே கோட்ட கலந்தாய்வுக் குழு உறுப்பினர், விருதுநகர், தென்காசி ரயில் நிலையங்களின் கட்டமைப்பு மேம்படுத்தக் கோரியும் கோரிக்கையை வைத்துள்ளார். இந்த மனுவை இரயில்வே முதன்மை செயல் இயக்குநர் மற்றும் இரயில்வே உள்கட்டமைப்பு அதிகாரிகளிடத்தில் அவர் வழங்கியுள்ளார். இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்காசி எம்.பி தனுஷ்குமார், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர்களின் கோரிக்கைக் கடிதங்களையும், மற்றும் அருப்புக்கோட்டை இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம் மற்றும் அருப்புக்கோட்டை வட்டார இரயில் பயணிகள் நலச் சங்கம் ஆகியோரின் கோரிக்கைக் கடிதங்களையும் அவர் தனது கோரிக்கையுடன் இணைத்து வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.