மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.
இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நன்னடத்தை குழு, மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. அதில் நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரை அறிக்கை தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பரிந்துரை அறிக்கைக்கு அதிக உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தால் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.
இதையடுத்து, இன்று, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “துர்க்கை வந்துவிட்டார்; பொறுத்திருந்து பார்ப்போம். துணிகளை உருவ துவங்கிய இவர்கள், தற்போது மகாபாரத போரை பார்ப்பார்கள்” என்று தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசிய அவர் புகழ்மிக்க கவிஞரும், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினருமான ராம்தாரி சிங் தினகரின் வரியை மேற்கோள் காட்டி, “ஒரு மனிதன் அழியும் போது முதலில் மனசாட்சி மரணிக்கிறது” என்று தெரிவித்துவிட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
பின்னர், மக்களவையில் எம்.பி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற வாளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மஹுவா மொய்த்ரா, “அதானிக்காக மட்டுமே ஒட்டுமொத்த அரசும் இயங்கி வருகிறது; அதானி மீதான ரூ.13,000 கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் புகாரில், சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் என்ன செய்தது; அதானி என்ற ஒருவருக்காக ஒட்டுமொத்த அரசும் இயங்கி வருகிறது. எனது பதவியை பறித்து வாயை அடைப்பதன் மூலம், அதானி விவகாரத்தை மறைக்க முடியாது; சி.பி.ஐ. நாளை என் வீட்டிற்கு அனுப்பப்படும்; அடுத்த ஆறு மாதத்திற்குள் என்னை கைது செய்வார்கள்; இது நிச்சயம்; எனக்கு 49 வயதாகிறது. இன்னும் 30 வருடங்களுக்கு நான் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும், வீதிகளிலும் போராடுவேன். தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வரும் பாஜக அரசின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது” எனத் தெரிவித்தார்.