கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதிமுதல் கரோனா தொடர்ந்து அதிகரித்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்திருந்தது புதுவை அரசு.
கடந்த மே மாதம் மட்டும் புதுச்சேரியில் கரோனா தொற்று எண்ணிக்கை என்பது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தது. அதேபோல் பலி எண்ணிக்கை தினமும் 30 என்ற வகையில் இருந்தது. இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகளால் தொற்று எண்ணிக்கை புதுவையில் 500 என குறைந்திருக்கிறது. இதையடுத்து இன்றுமுதல் (08.06.2021) ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளைப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில், இன்றுமுதல் அனைத்து கடைகளும் (ஜவுளி கடைகள், நகைக் கடைகள்) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும். அதேபோல் நடைமுறையில் இருந்த அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விற்கும் கடைகள் 6 மணியிலிருந்து 5 மணிவரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டிருந்த புதுச்சேரி கடற்கரை 42 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் 5 மணிமுதல் 9 மணிவரை மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களும் இன்றுமுதல் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் வருகை புரிந்துவருகின்றனர். அதேபோல் மதுக்கடைகளும் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.