தனது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பதற்காக தனி விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழிலதிபரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இதனால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக விமானங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மதுபான தொழிலதிபரின் குடும்பம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு போபால் வந்தபோது ஊரடங்கு விதிக்கப்பட்டதால் அங்கேயே சிக்கிக்கொண்டனர். மதுபான அதிபர் மட்டும் தில்லியில் உள்ள வீட்டில் இருந்துள்ளார். மனைவி, மக்களை அழைத்துவர அவர் பல முயற்சிகளை எடுத்தாலும் லாக் டவுன் காரணமாக எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப உறுப்பினர்களுக்காகத் தனியாக ஒரு விமானத்தை 20 லட்சம் செலவு செய்து அமர்த்தி அந்த விமானத்தில் கடந்த புதன் கிழமை அவர்களை தில்லி வரவைத்தார். இந்தச் செய்தி இணையத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.