ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போட்டித் தேர்வு பயிற்சிகளை தனியார் பயிற்சி நிறுவனங்களின் மூலம் பெற்று வருகின்றனர். மேலும், ராஜஸ்தான் மாநிலம் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, பீகார், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கோட்டா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலை அதிகரித்து உள்ளது. தற்கொலைகளை தடுப்பதற்கு விடுதிகளில் ஸ்ப்ரிங் வைத்த மின் விசிறிகளை பயன்படுத்தவும் அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது மாணவி தற்கொலை சம்பவமும் நடந்துள்ளது. எனவே, இந்த வருடத்தின் கோட்டாவில் நடந்த 25வது தற்கொலை என்றும் கூறப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த மாணவி, கடந்த மே மாதம் நீட் தேர்விற்காக கோட்டாவில், விக்யான் நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வசித்து வந்துள்ளார். இவருடன் ஒரு மாணவியும் உடன் தங்கி பயின்று வந்துள்ளார். கடந்த செவ்வாய் இரவு அறைத் தோழி போன் பேசுவதற்காக வெளியே வந்துள்ளார். பின்னர், தற்கொலை செய்து கொண்டதாக சொல்லும் பெண் அறைக் கதவை மூடிவிட்டார். பலமுறை தட்டியும் பதிலளிக்காததால், அவளது அறை தோழி விடுதி காப்பாளரை அழைத்துள்ளார். பின் கதவைத் திறந்து தூக்கிட்ட நிலையில் இருந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடுத்து, பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, ராஜஸ்தான் அமைச்சர் சாந்தி தரிவால், “ஒவ்வொரு வழக்கையும் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. அவர் ஒரு கடிதமும் வைத்திருந்தார்” என அமைச்சர் பேசியுள்ளார்.
ஆனால், துணை எஸ்.பி. தர்மவீர் சிங், தற்கொலைக் கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை என்றும் காதல் விவகாரம் குறித்த துப்பு கிடைக்கவில்லை என மறுத்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், “எங்கள் மகள் அப்படிப்பட்ட பெண் அல்ல. அமைச்சர் தாரிவால் ஏதேனும் சாட்சியோ அல்லது ஆதாரமோ இருந்தால் அவர் அதைப் பகிர வேண்டும்” என மறுத்து பேசியுள்ளார். மேலும் மாணவி விடுதியில் இருந்து பயிற்சி மையம் செல்லும் வழியில் சில மாணவர்கள் அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாகவும் பெண்ணின் தந்தை பேசினார். இப்படி அமைச்சர் ஒருவர், தற்கொலை குறித்து பேசியது ராஜஸ்தானில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.