கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தமிழகத்திற்கு காவிரி நீரை தர முடியாது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி சென்று மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து மேகதாது விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகா இடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அமைச்சர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை ஜூன் மாதத்தில் கொடுக்கவில்லை. அதனால் காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். ஜூன் மாதம் தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் 2.833 டிஎம்சி தண்ணீரைத்தான் வழங்கியுள்ளனர். 6.357 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம். தமிழர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது. தமிழர்கள் கர்நாடகாவில் வேலை செய்கின்றனர். கன்னடர்கள் தமிழகத்தில் வேலை செய்கின்றனர். உரிய சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.