சானிடைசர் தயாரிப்பதற்காக இந்தியாவிலிருந்து அரிசியை ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் முடிவை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் தனது தீவிரத்தன்மையை காட்டிவரும் சூழலில், இந்த வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தலுக்கு அடுத்து மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது நமது கைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வது. கிருமி நமது உடலுக்குள் செல்லாமல் தடுக்கவே கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில் கரோனா பரவலுக்கு பிறகு சானிடைசர் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்தும் பழக்கம் மக்களிடம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சில நாடுகளில் சானிடைசருக்கு தட்டுப்பாடும், பல நாடுகளில் சானிடைசர் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரிசியின் மூலம் எத்தனால் தயாரித்தால், அதை சானிடைசருக்கும், பெட்ரோலில் கலக்கவும் பயன்படுத்த முடியும் என்பதால் சானிடைசர் தயாரிக்க இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதி செய்ய நேற்று அனுமதி வழக்கப்பட்டுள்ளது. தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழு நேற்று எடுத்துள்ள முடிவின்படி, இந்திய உணவுக் கழகத்திலிருந்து உபரி அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, எத்தனால் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏழை மக்கள் பலர் உணவு கிடைக்காமல் அல்லாடிவரும் சூழலில், மத்திய அரசின் இந்த முடிவு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, "ஏழை மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சானிடைசர் தயாரிக்க அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கிறது.
இந்தியாவில் உள்ள ஏழைகள் எப்போது விழிப்படைவார்கள்? நீங்கள் பசியில் செத்து மடிகிறீர்கள். ஆனால், அவர்கள் பணக்காரர்கள் கைகளைக் கழுவுவதற்காக, உங்களுக்காக வைத்திருக்கும் அரிசியை சானிடைசர் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.