11 ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்க விண்ணப்பித்துள்ளார் ஜார்க்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்டோ.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஜகர்நாத் மஹ்டோ 1995-இல் 10 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு தனது படிப்பைத் தொடராத அவர், அரசியலில் நுழைந்து தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், 53 வயதான அவர் தற்போது மீண்டும் தனது படிப்பை தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "நான் இப்போது 11 ஆம் வகுப்பில் சேர்கிறேன், கடினமாக படிக்க உள்ளேன். நான் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நான் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பதவியில் இருப்பதால், எனது திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது, இது என்னை மிகவும் புண்படுத்தியது. எனவே, முதலில் இடைநிலைத்தேர்வுகளில் வெற்றிபெற்றபிறகு, உயர்கல்வி படிக்கும் விருப்பமும் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். போகாரோ மாவட்டத்தில் உள்ள தேவி மஹ்தோ கல்வி நிலையத்தில் தற்போது இவர் 11 ஆம் வகுப்பு சேர்ந்துள்ளார்.