யாஹூ செய்தி இணையத்தின் செயல்பாட்டை, யாஹூ நிறுவனத்தின் உரிமையாளரான வெரிசோன் மீடியா இந்தியாவில் நிறுத்தியுள்ளது. யாஹூ கிரிக்கெட், யாஹூ பைனான்ஸ் உள்ளிட்ட இணைய சேவைகளும் இந்தியாவில் நிறுத்தப்படுள்ளன.
மத்திய அரசு, அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிகளில் செய்த மாற்றங்கள், அக்டோபரில் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த புதிய விதிகளின்படி, இணைய ஊடக நிறுவனங்களில் 26 சதவீதம் வரை மட்டுமே நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும். இதனால் வெளிநாட்டு நிறுவனமான யாஹூ, இந்தியாவில் தொடர்ந்து செயல்பட அதன் வர்த்தக அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும்.
இதன்காரணமாக வெரிசோன் மீடியா, யாஹூ சேவையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெரிசோன் மீடியாவின் உலகளாவிய பொதுக் கொள்கையின் தலைவர் ஏப்ரல் பாய்ட், "குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஊடக வணிகத்தை மறுசீரமைப்பதில் உள்ள செயல்பாடு மற்றும் பொருளாதார சவால்களாலும், செய்தி மற்றும் நடப்பு விவகார உள்ளடக்க வணிகத்தை செயல்படுத்துவதற்கு தேவையான அரசு ஒப்புதல்கள் இல்லாததாலும் நாங்கள் எங்கள் செயல்பாட்டை இந்தியாவில் நிறுத்தியுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.