கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது தங்கையான பிரியங்காவுக்கு உபி கிழக்கு பகுதி பொதுச் செயலாளர் பதவியை கொடுத்து பலருக்கு அதிர்ச்சி அளித்தார். பலர் இதனை வரவேற்றனர். இந்நிலையில், பிரியங்கா காந்தி கட்சி பதவியேற்று முதல் அரசியல் பேரணியை லக்னோவில் தற்போது தொடங்கப்பட்டது. இந்த பேரணியில் ராகுல் காந்தியும் கலந்துகொள்கிறார்.
முன்னதாக, தனது பயணம் தொடர்பாக ஆடியோ செய்தியை வெளியிட்டுள்ள பிரியங்கா காந்தி, இளைஞர்களுக்கும் சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். வாருங்கள் புதிய அரசியலையும் புது யுகத்தையும் கட்டமைப்போம் என்று அதில் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் காலை 11 மணி தொண்டர்களை சந்திக்கும் பிரியங்கா, பிப்ரவரி 14ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து 42 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளையும் சந்திப்பார் என்று தெரிகிறது.
இந்நிலையில், “இந்த தேசத்தின் காவலாளி, உத்திரப் பிரதேசம், மற்ற மாநிலங்கள் மற்றும் ஏர் ஃபோர்ஸ் என்று அனைத்திலிருந்தும் பணத்தை கொள்ளை அடித்துவிட்டார். காவலாளியே ஒரு திருடன். நாட்டின் இதயமாக செயல்படுவது உபி மாநிலம். நாம் முன்னோக்கி செல்ல செயல்படுவோம். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் இங்கு உருவாகும் வரை நானும் பிரியங்கா ஜி மற்றும் சிந்தியா ஜியும் ஓய்வெடுக்கமாட்டோம்” என்று உபி மாநிலம் லக்னோவில் நடந்த மாபெரும் பேரணியில் பேசினார் ராகுல் காந்தி.