மிக்-21 பைஸன் என்னும் போர் விமானம், பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானத்துடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியதில் இந்திய விமானப்படை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் பாக். ஆர்மியிடம் சிக்கிகொண்டார். பின்னர், அவரை ராவல்பிண்டியிலுள்ள போர்க் கைதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்றது பாக் ராணுவம். இதன் பின் நல்லிணக்க அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்கப்பட இருக்கிறார் என்று பாக். பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.பிறகு, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நேற்று பிற்பகல் அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்படுவார் என்று கூறினார்.
இதனால் வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் அபிநந்தனை வரவேற்பதற்காக கூடினார்கள். பிற்பகல் மூன்று அளவில் இந்திய எல்லையில் ஒப்படைக்கப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், நேரம் அதிகமாகி இரவு 9 மணிக்கு மேல்தான் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன். வாகா எல்லையிலிருந்து அபிநந்தனை நடைமுறை விதிமுறைகளின்படி அழைத்துச் செல்வதற்காக இரண்டு ஐஏஎஃப் வீரர்கள் வந்திருந்தனர். பாக். தரப்பில் ஒரே ஒரு பெண் அதிகாரி அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வந்திருந்தார். அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டபோது அந்த பாக் பெண் அதிகாரியும் அனைத்து புகைப்படங்களிலும் பதிவாகியிருந்தார். நேற்று அவர் யாராக இருக்கும் என்கிற கேள்வி பலருக்கு ஏற்பட்டது. வைரலான அந்த பெண் யார் என்று இணையத்திலும் தேடியிருக்கிறார்கள்.
தற்போது அந்த பெண்ணின் தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்டர். ஃபரிஹா புக்தி என்ற அந்தப் பெண், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இந்திய விவகாரங்களை கையாளும் பிரிவில் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார். அதாவது, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில், இந்திய வெளியுறவு தொடர்பான விவகாரங்களைக் கையாண்டுவருகிறார். இதனால்தான் நேற்று அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க அவர் வாகா எல்லைக்கு வந்துள்ளார்.
பாகிஸ்தானில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் தொடர்பான வழக்கையும் இவர்தான் கவனித்துகொண்டு இருக்கிறார். இந்திய உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் குல்பூஷனை கைது செய்திருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குல்பூஷனின் அம்மா, மனைவியை சந்தித்தபோது உடன் இருந்தவர் இந்த ஃபரிஹா புக்தி.