உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று நாளையுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மூன்றாண்டுகள் முதல்வராகப் பதவி வகித்த பாஜகவைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று 2017, மார்ச் 19 அன்று அம்மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார் யோகி ஆதித்யநாத். நாளையுடன் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதற்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த கல்யாண் சிங் இரண்டு ஆண்டுகள் 52 நாட்கள் முதல்வராக இருந்ததே பாஜகவைச் சேர்ந்த ஒருவர் உத்தரப்பிரதேசத்தின் அதிகபட்சம் முதல்வராக இருந்த கால அளவு ஆகும்.
இந்நிலையில், பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைவது குறித்து கருத்து தெரிவித்துள்ள யோகி ஆதித்யநாத், "மூன்று ஆண்டுக்கால நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் நல்லாட்சி ஆகியவை 23 கோடி மக்கள் வசிக்கும் உத்தரப்பிரதேசத்தைப் பின்தங்கிய மாநிலம் என்ற நிலையிலிருந்து புதிய வளர்ச்சிக்கு மாதிரியான ஒரு மாநிலமாக மாற்றியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.