கேரள சட்டமன்றத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநில முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்கிறார்.
கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி 99 சட்டமன்றத் தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கூட்டணி 41 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.
கேரளாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகிறார் பினராயி விஜயன்.
"இந்த மாபெரும் வெற்றியை நான் கேரள மக்களுக்கு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன். கரோனா தொடர்ந்து பரவுவதால் இது கொண்டாடும் நேரமில்லை; கரோனாவுடன் போரிடும் நேரம்" என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.