கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அடுத்த ஓராண்டுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், ஆரம்பத்தில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைத்திருந்த கேரளாவும் தற்போது வைரஸைக் கட்டுப்படுத்தத் திணறி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் சூழலில், இதுவரை பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடந்துள்ளது. இதில் 2,000 க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்பு விதிமுறைகள் அடுத்த ஓராண்டுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எனக் கேரள அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பொதுக்கூட்டங்கள், சமய மாநாடுகள் நடத்தக்கூடாது, திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேர், இறுதி ஊர்வலங்களில் அதிகபட்சமாக 20 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓராண்டுக்கு பொதுவெளிகளில் மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆறு அடி சமூக இடைவெளியைப் பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபர்களைத் தண்டிக்கும் வகையில் அம்மாநிலத்தில் அவசரச் சட்டம் ஏற்பாடாகியுள்ளது.