2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார்.

சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைத்தன. மசோதா மக்காவையில் வெற்றிபெற்றதை அடுத்து நாடு முழுவதும் பல இடங்களில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மத ரீதியிலான குடியுரிமை வழங்குவது என்பது இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சாற்பற்றத்தன்மை ஆகிய கொள்கைகளுக்கு எதிரானது என்ற முழக்கங்களுடன் போராட்டங்கள் நடந்து வருகிறது, அந்த வகையில் அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூா், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முழு அடைப்பு காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.