மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், டெல்லி மாநில அரசு வேளாண் மசோதாக்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றியது.
அதனைத் தொடர்ந்து, கேரள மாநில அரசும் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை அமர்வைக் கூட்டுமாறு அம்மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. ஆனால் இப்பரிந்துரையை கேரள ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார். இதனை எதிர்த்து கேரள முதல்வர் கடிதம் எழுதினார். அதற்குப் பதிலளித்த ஆளுநர், கேரள அரசு தீர்வு வழங்க அதிகாரமில்லாத ஒரு பிரச்சனை குறித்து விவாதிக்க, சிறப்பு அமர்வைக் கூட்டுமாறு கேட்டதால், சிறப்பு அமர்வைக் கூட்டவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வரும் டிசம்பர் 31 ஆம் தேதி, கேரள அரசு சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளது. சிறப்பு சட்டமன்ற அமர்வைக் கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், வழக்கமான சட்டசபை அமர்வைக் கூட்ட கேரள அரசு பரிந்துரைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.