1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், தங்கள் இன்னுயிரைத் தந்த இந்திய வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பு சுடர் விட்டுக்கொண்டிருக்கும் அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கில் இணைக்கப்பட இருப்பதாகவும், இந்தியா கேட் முன்புள்ள அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவுள்ளதாகவும் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும் இவ்வேளையில், கிரானைட் கற்களால் ஆன அவரது பிரம்மாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்தியா அவருக்கு கடன்பட்டிருக்கிறது என்பதை குறிக்கும் அடையாளமாக இருக்கும்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரம்மாண்ட சிலை கட்டி முடிக்கப்படும்வரை, அவரது ஹாலோகிராம் சிலை அங்கு நிறுவப்படும். நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி அவரின் ஹாலோகிராம் சிலையை திறந்து வைக்கவுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். ஹாலோகிராம் சிலை என்பது ஒளிக்கற்றை மூலம் உருவாக்கப்படும் மெய்நிகர் முப்பரிமாண சிலை என்பது குறிப்பிடத்தக்கது.